11 ஆண்டுகளில் டிசம்பர் மாதம் மட்டும் ஏன் தோனிக்கு ஸ்பெஷல்?

11 ஆண்டுகளில் டிசம்பர் மாதம் மட்டும் ஏன் தோனிக்கு ஸ்பெஷல்?

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் மகேந்திர சிங் தோனிக்கும் டிசம்பர் மாதத்துக்கும் நிறைய நெருக்கம் உண்டு. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டி, டி-20 ஆகிய மூன்றிலும் மகேந்திர சிங் தோனி களமிறங்கியது டிசம்பர் மாதத்தில்தான். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், டிசம்பர் மாதத்தில் இதே 30-ம் தேதியில்தான் ஓய்வை அறிவித்து, கோடிக்கணக்கான தனது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

இந்தியா மட்டுமல்ல, உலகின் எல்லா நாடுகளிலும் 30 வயதை கடந்த சீனியர் ஸ்டார் வீரர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். பிரெண்டன் மெக்கல்லம் தடாலடியாக ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். தற்போதைய நம்பர் 1 பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ், இட ஒதுக்கீடு, பணிச்சுமை போன்ற காரணங்களால் ஏதாவதொரு பார்மேட்டிலாவது ஓய்வு பெறவுள்ளதாக சூசகமாக தெரிவித்துள்ளார். டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவு குறித்து யோசிப்பதற்கு காரணமே விக்கெட் கீப்பிங் பணி தான். பிரண்டன் மெக்குல்லமும் சிறந்த விக்கெட் கீப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்கெட் கீப்பிங்கிலும் கவனம் செலுத்தி, பேட்டிங்கிலும் கவனம் செலுத்துவது என்பதே மிகவும் கடினமான விஷயம். ஆனால், தோனி விக்கெட் கீப்பிங், பேட்ஸ்மேன், கேப்டன் என மூன்று விஷயங்களையும் அனாயசமாக கையாண்டு, இந்திய அணிக்கு மூன்று ஐசிசி கோப்பைகளையும் வாங்கித்தந்து, டெஸ்ட் போட்டியில் நம்பர் ஒன் அந்தஸ்துக்கும் இந்திய அணியை அழைத்து சென்றார். தோனி கிரிக்கெட் விளையாட வந்து பதினோரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது, அநேகமாக அடுத்த ஆண்டு உலகக்கோப்பை டி20க்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து அவர் முழு ஓய்வு அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தோனியின் பெர்ஃபார்மென்ஸ், கேப்டன்சி என அவரது கேரியர் பற்றி ஒரு ஃபிளாஷ்பேக் போலாமா?

ஒருதினபோட்டி

மகேந்திர சிங் தோனி முதலில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி வங்கதேச அணிக்காக ஒருதின போட்டியில் களமிறங்கினார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முதலில் காலடி எடுத்து வைத்த தோனி, எத்தனை ரன்கள் எடுத்தார் என்று தெரியுமா? முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 41 ஓவரில் 180/5 என தத்தளித்து கொண்டிருந்தது. பங்க் ஹேர்ஸ்டையிலுடன் மைதானத்துக்கு வந்த தோனி, முதல் பந்திலேயே ரன் அவுட் ஆனார். சாதாரண டிக்கெட் கலெக்டராக இருந்த மகேந்திர சிங் தோனி, பல்வேறு தடைகளுக்கு பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்து, தனது முதல் போட்டியிலேயே டக் அவுட் ஆனதில், மகேந்திர சிங் தோனி மட்டுமல்ல பீகார் மாநிலமே அதிர்ச்சி அடைந்தது. முதல் போட்டியில் ஜீரோவில் ஆரம்பித்தாலும் அடுத்த போட்டியிலேயே ரஜினி பட பாணியில் ஹீரோ ஆகிவிட வில்லை. வங்கதேச தொடர் முழுவதும் சொதப்பல்தான். மூன்று போட்டிகளில் விளையாடி தோனி எடுத்த ரன்கள் வெறும் 19 தான்.

வங்கதேச தொடருக்கு பின்னர், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் தோனியை கழட்டிவிட்டுவிடலாமா என அணி நிர்வாகம் யோசித்த போது, தோனி கண்டிப்பாக வேண்டும் எனக்கேட்டு வாங்கினார் சவுரவ் கங்குலி. கங்குலிக்கு எப்போதுமே இளம் வீரர்களை அடையாளம் காணுவதில் செம அலாதி உண்டு. வங்கதேச தொடரில் ஏழாவதாக இறங்கி கொண்டிருந்த தோனியை முன் கூட்டியே இறங்க வைக்கலாமா என்ற யோசைனையில் இருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முதல் ஒரு தினப் போட்டியில் சேவாக், டிராவிட் சதத்தால் இந்தியா வென்றது.

சேவாக், கங்குலி, சச்சின், டிராவிட், யுவராஜ், கைப் என சீனியர் பிளேயர்களுக்கு பின்னர்தான் தோனி இறங்கி கொண்டிருந்தார். தோனியை முன் கூட்டியே களமிறக்க வேண்டும் எனில் யாரை பின்னால் களமிறக்குவது என யோசித்தவர், சீனியர், ஜூனியர் பிரச்னை அணியில் வரக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தார். விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஒரு தினப் போட்டி தொடங்கியது, தொடக்க ஆட்டகாரராக ஷேவாக், சச்சின் களமிறங்கினர். சச்சின் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்தார். வழக்கமாக மூன்றாமிடத்தில் களமிறங்கும் கங்குலி, அன்றைய தினம் தனது இடத்தை தியாகம் செய்து, தோனியை மூன்றாவதாக இறங்க வைத்தார். ஷேவாக்குடன் ஜோடி சேர்ந்தார் தோனி. தோனி களமிறங்கியவுடன் முகமது ஷமி வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதகளப்படுத்தினார்.

அதன் பின்னர் ஷேவாக்கும், தோனியும் சேர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர். குறிப்பாக ஷேவாக், அப்ரிடியின் ஓவரில் நான்கு பவுண்டரிகளை விளாசினார். அப்ரிடியின் ஓவரில் தோனிதான் முதல் சிக்ஸர் அடித்தார். இரண்டு பேரும் பாகிஸ்தான் பவுலர்களுக்கு மரண அடி கொடுக்க, ஸ்கோர் ஜெட் வேகத்தில் சென்றது. பதினான்காவது ஓவரில் இந்திய அணியின் ஸ்கோர் 122 ரன்கள். அதிரடியாக விளையாசிய ஷேவாக் 40 பந்தில் 12 பவுண்டரி, இரண்டு சிக்சர் விளாசி 74 ரன்னில் அவுட் ஆனார்.

அதன் பின்னர் விஸ்வரூபம் எடுத்தார் தோனி. எந்த பவுலர் எப்படி வீசினாலும் பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டிக் கொண்டே இருந்தார். தோனி விளையாடிய வேகத்தை பார்த்தபோது முதல் இரட்டை சதம் அடித்து விடுவார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால் 42-வது ஓவரில் 122 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சர் உதவியுடன் 148 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 356 ரன்களை குவித்து, 58 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. முதன் முதலில் ஆட்ட நாயகன் விருது வாங்கினார் தோனி. அந்த போட்டிக்கு பிறகு தோனி லெவலே வேறாக மாறிப்போனது. இலங்கைக்கு எதிராக 183 ரன்கள், 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் கோப்பை என தோனிக்கு ஏறுமுகம்தான். தோனி கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது இந்த ஆண்டு (2015) தான். இந்த ஆண்டு தோனி ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை. தோனியின் மோசமான காலகட்டம் முடிந்து, 2016 மீண்டும் தோனியின் ஆண்டாக மாறும் என நம்புவோம்.

டெஸ்ட் போட்டி

2004 டிசம்பரில் ஒருதின போட்டியில் களமிறங்கிய தோனிக்கு, 2005 டிசம்பரில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையில்தான் முதல் டெஸ்ட் போட்டி விளையாடினார் தோனி. சென்னை, தோனிக்கு எப்போதுமே ராசியானதுதான். டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ஸ்கோரான 224 ரன்களை சென்னையில்தான் அடித்தார் தோனி.

விளையாட்டில் அவ்வப்போது சில தற்செயலான ஒற்றுமையான நிகழ்வு நடைபெறும். தோனிக்கும் அப்படித்தான். ஒருதின போட்டி போலவே டெஸ்ட் போட்டியிலும் முதல் நான்கு போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. ஐந்தாவது டெஸ்ட் போட்டி பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இன்சமாம் மற்றும் அப்ரிடியின் அதிரடி சதத்தால் 588 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணியில் மற்ற வீரர்கள் அவுட் ஆக, டிராவிட் மட்டும் பொறுமையாக விளையாடி சதமடித்து அவுட் ஆனார். இந்திய அணி 281 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் தோனியும், இர்பான் பதானும் இருந்தார்கள். தோனியை தவிர மீதி இருப்பவர்கள் அனைவரும் பவுலர்கள். பாலோ ஆனை தவிர்க்கவே 93 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலையில், இந்திய அணி கண்டிப்பாக பாலோ-ஆன் ஆவது உறுதி என எல்லோரும் சொல்லிக்கொண்டிருக்க, நிலைமையை தலைகீழாக மாற்றியது தோனி -பதான் ஜோடி.

தோனி ஒருதின போட்டிகள் போல பவுண்டரி, சிக்சர் என வெளுக்க ஆரம்பித்தார். 85 ஓவரில் 281/5 என்ற நிலையில் இருந்து அடுத்த 45 ஓவரில் 210 ரன்களை குவித்து இந்தியா. அதில் 148 ரன்கள் எடுத்தது தோனிதான். இர்பான் பதான், மேலும் சில பவுலர்கள் துணைக்கொண்டு சிறப்பாக விளையாட, முதல் இன்னிங்ஸில் 603 ரன்கள் குவித்தது இந்தியா. பாகிஸ்தானை விட 15 ரன்கள் முன்னிலை பெற்றது. தோனி டெஸ்ட், ஒருநாள் ஆகிய இரண்டு பார்மேட்டிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிராகத்தான் சதம் எடுத்தார். இரண்டு முறையும் 148 ரன்களில் அவுட்டானது சுவாரஸ்யமான விஷயம்.

ஒருதின போட்டியை விட டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு, பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடுவது மிகக்கடினம். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரையில் ஆரம்பகட்டத்தில் இந்திய அணி, தோனி தலைமையில் வெற்றிகளை வாரிக்குவித்தது. ஆசிய மண்ணில் தோனி சிறப்பாக விளையாடுவார். இந்திய அணியும் தொடர் வெற்றியை பெற்று வந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்திய அணி, டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் தோல்வி அடைந்திருக்கிறது. தோனி இதுவரை ஆசிய மண்ணை தாண்டி மற்ற நாடுகளில் ஒரு சதம் கூட அடித்தது இல்லை. தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் இதுவரை ஏழு டெஸ்ட் விளையாடியுள்ள தோனி, ஒரே ஒருமுறை மட்டுமே அரை சதம் அடித்துள்ளார். அயல் மண்ணில் தொடர்ந்து தோனியின் பெர்ஃபார்மென்ஸ் மோசமாக இருந்ததால்தான் கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார் தோனி.

டி-20

அட, டிசம்பர் மாதத்தில் தான் முதன் முதலாக டி-20 போட்டியிலும் களமிறங்கியிருக்கிறார் தோனி. தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் தோனி இரண்டு பந்துகளை சந்தித்து டக் ஆனது இன்னொரு சுவாரஸ்யம். சேஸிங்கை பொறுத்தவரையில் இன்றளவும் உலகின் சிறந்த ஃபினிஷர்களில் தோனியும் ஒருவர். முதன் முதலில் நடந்த டி20 உலகக்கோப்பையை இந்தியா கைப்பற்ற தோனியின் கேப்டன்சி ஒரு முக்கிய காரணம். தோனிக்கு சுக்கிர திசை, 2007 உலகக்கோப்பையில் இருந்துதான் தொடங்கியது. அதன் பின்னர்தான் கோப்பை மழையில் நனைந்தார் தோனி.

இந்திய அணியின் கேப்டனாக தோனி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், இந்தியாவுக்காக விளையாடிய டி-20 போட்டிகளில், தோனி அரிதிலும் அரிதாகவே சிறப்பாக விளையாடியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்காக விளையாடிய 52 போட்டிகளில் வெறும் 874 ரன்களை மட்டுமே குவித்திருக்கிறார்.

இந்தியாவுக்குக்காக விளையாடியதில் இதுவரை ஒரு டி-20 போட்டியில் கூட அரை சதம் எடுத்ததில்லை, தவிர கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவுக்காக விளையாடிய 23 போட்டிகளில் ஒன்றில் கூட 40 ரன்களை தோனி கடந்ததில்லை என்கிறது புள்ளிவிவரங்கள். அடுத்த ஆண்டு நடக்கும் டி-20 உலகக்கோப்பையை அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு கோப்பையை வாங்கித்தருவார் என நம்புவோம்.

தோனிக்கு ஒரு சியர்ஸ் சொல்வோம்.

Advertisements